முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக இன்று (புதன்கிழமை) மதுரை செல்லும் அவர், பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் சிலையை திறந்து வைக்கிறார்.

Update: 2023-08-15 20:43 GMT

ராமநாதபுரம்,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளையும், நாளை மறுநாளும் (வியாழன், வெள்ளிக்கிழமை) ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் இன்று (புதன்கிழமை) மாலை சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை செல்கிறார்

விமான நிலையத்தில் இருந்து காரில் மதுரை முனிச்சாலை பகுதிக்கு வருகிறார். அங்கு மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் நிறுவப்பட்ட பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் உருவச்சிலையை திறந்து வைக்கிறார். இந்த விழாவைதொடர்ந்து ரிங்ரோடு பகுதியில் உள்ள ஓட்டலில் தங்குகிறார்.

வரவேற்பு ஏற்பாடுகள்

நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் கார் மூலம் ராமநாதபுரம் புறப்படுகிறார். மாவட்ட எல்லையான பார்த்திபனூர் பகுதியில் இருந்து ராமநாதபுரம் வரை 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

மதியம் 1 மணி அளவில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் தங்கும் விடுதிக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலை 4 மணி அளவில் ராமநாதபுரம் அருகே பேராவூர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நடைபெறும் தென்மண்டல அளவிலான தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

மீனவர்கள் மாநாடு

பின்னர் ராமேசுவரம் சென்று அங்குள்ள தனியார் விடுதியில் இரவு தங்குகிறார். நாளை மறுநாள் காலை 10 மணி அளவில் மண்டபம் கலோனியல் பங்களா அருகில் நடைபெறும் மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, மீனவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றி அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார்.

முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் விழாவுக்காக ராமநாதபுரம் அருகே பேராவூர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. இதேபோல மண்டபம் பகுதியில் நடைபெறும் மீனவர்கள் மாநாட்டுக்கும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்