"ஒடிசாவில் தங்கியிருந்து காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டும்" - தமிழக குழுவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஒடிசா சென்றுள்ள தமிழக குழுவுக்கு,முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-06-03 13:53 GMT

ஒடிசாவில் நேற்று இரவு 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுரா நோக்கி நேற்று இரவு 7 மணியளவில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. அதேபோல், மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது.

ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பகனாகா பஜார் அருகே பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த ரெயில் தடம் புரண்டது. தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட அந்த ரெயிலின் பெட்டிகள் சில அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்தது.

அப்போது, அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்த ஷாலிமார்-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்ட பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது. அடுத்தடுத்து 2 பயணிகள் ரெயில், 1 சரக்கு ரெயில் என மொத்தம் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 900 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் பல தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்தவர்களை முதலுதவி சிகிச்சைக்குப் பின் விமானம் மூலம் தமிழகத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரெயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்டு அழைத்து வர அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் குழு ஒடிசா விரைந்துள்ளது. இந்த நிலையில் ஒடிசா சென்றுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு, ஒடிசா மாநில முதல் மந்திரியை சந்திக்கிறது. ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆலோசிக்க உள்ளனர்.

"ஒடிசாவில் தங்கியிருந்து காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என ஒடிசா சென்றுள்ள தமிழக குழுவுக்கு,முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்