மதுரையில் நாளை தூய்மைப்பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதுரை விமான நிலைய நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட மேதை அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை முதல் அமைச்சர் நாளை திறந்துவைக்கிறார்.
மதுரை,
மதுரையில் நாளை மாநகராட்சி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கான மேம்பாட்டு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து பெருங்குடியில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையையும் திறந்து வைத்து பேசுகிறார்.
மதுரை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டார். முதல் அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக ரெயில் பயணம் செய்யும் மு.க.ஸ்டாலின் இன்று காலை தென்காசி சென்றடைந்தார். தென்காசியில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
இன்று மாலை மதுரை வரும் அவர், அழகர் கோவில் ரோட்டில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் இரவு தங்குகிறார். நாளை (9-ந் தேதி) காலை 10 மணியளவில் மதுரை மாநகராட்சி அலுவலகத்துக்கு மு.க.ஸ்டாலின் வருகிறார். அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொன்விழா நினைவு நுழைவாயிலை திறந்து வைக்கிறார்.
இதை தொடர்ந்து மாநகராட்சி அரங்கில் தமிழகம் முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்களுக்கான மேம்பாட்டுத்திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். பின்னர் காரில் புறப்படும் மு.க.ஸ்டாலின் தல்லாகுளம், கோரிப்பாளையம், வில்லாபுரம் வழியாக பெருங்குடி வருகிறார்.
மதுரை விமான நிலைய நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட மேதை அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். இதை தொடர்ந்து விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் முதல் அமைச்சரின் பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.