வேலூரில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்

வேலூரில் அடுத்த மாதம் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.;

Update: 2023-05-17 17:31 GMT

நலத்திட்ட உதவிகள்

வேலூர் மாவட்டம் சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா, வேலை வாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா, 1,411 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காட்பாடியில் நேற்று நடந்தது. விழாவிற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். டி.எம்.கதிர் ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி. நந்தகுமார், அமலுவிஜயன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். வேலூர் உதவி கலெக்டர் கவிதா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு 362 பேருக்கு பணி ஆணையையும், ரூ.3 கோடியே 61 லட்சத்து 88 ஆயிரத்து 333 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நலத்திட்ட உதவி போதாது

இப்போது ரூ.3 கோடியே 61 லட்சத்து 88 ஆயிரத்து333 அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இது போதாது. இது ரூ.30 கோடியாக இருந்தால் அனைவரையும் பாராட்டியிருப்பேன். தையல் எந்திரம் ஒருவருக்கு தான் கிடைக்கிறது. முதிர்கன்னி உதவித்தொகை 4 பேருக்கும், சலவை பெட்டி 5 பேருக்கும், வீல் சேர் 2 பேருக்கும் வழங்கப்படுகிறது. அரசு கொடுக்கிறது. அதிகாரிகள் இறங்கி வேலை செய்ய வேண்டும். கலெக்டர் சுறுசுறுப்பானவர் தான். அவர் மற்ற இலாக்காக்களை முடுக்கிவிட வேண்டும். அடுத்த முறை வரும்போது ரூ.30 கோடி அளவில் நலத்திட்டம் இருந்தால் அனைவரையும் வாழ்த்துவேன்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 24 மணி நேரமும் மக்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். சில நேரங்களில் சில தவறுகளை மக்கள் செய்துவிடுகிறார்கள். விஷச் சாராயம் குடித்து பல பேர் இறந்து விட்டார்கள் என்ற செய்தி கேட்டவுடன் முதல்-அமைச்சர் சாப்பிடாமல் விழுப்புரத்திற்கு சென்று சிகிச்சை பெறுபவர்களை பார்த்து நலம் விசாரித்துவிட்டு வரும் வழியில் தான் அவர் சாப்பிட்டார்.

வேலூர்- சேண்பாக்கம் இடையில் ஒரு தடுப்பணை கட்டப்படுகிறது. இது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும். காவிரியில் மாயனூர் என்ற இடத்தில் நான் அப்போது தடுப்பணை கட்டினேன். இப்போது அந்த இடங்கள் முள் காடுகளாக இருந்தது மாறி வாழைத்தோட்டங்களாக மாறி நிலங்கள் அதிக விலைக்கு விற்கிறது.

முதல்-அமைச்சர்

தற்போது வேலூர் மாவட்டத்தில் இறைவன்காடு, கவசம்பட்டு உள்பட 7 இடங்களில் தடுப்பணை கட்டப்படுகிறது. சிப்காட் தொழிற்சாலை காட்பாடியில் கொண்டுவரப்பட உள்ளது. அடுத்த மாதம் இறுதியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூரில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் வேலூர் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் பாபு, மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் பேசினர்.

விழாவில் இணை இயக்குனர் செந்தில்குமார், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், தாசில்தார் ஜெகதீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பரமேஸ்வரி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்