சிறுமியிடம் நலம் விசாரித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முகச்சிதைவு பாதிப்புக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி டான்யாவை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.;
சென்னை,
சென்னை ஆவடியை அடுத்த வீராபுரம் ஸ்ரீவாரி நகரை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். தையல்காரர். இவருடைய மனைவி சவுபாக்கியா. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன். இதில் இவர்களது மகளான டானியா (வயது 9), வீராபுரம் அரசினர் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு 3 வயது வரை இயல்பாக இருந்த முகம், அதன் பிறகு முகத்தின் வலது பக்கம் சிறிய கரும்புள்ளி தோன்றியது.
முதலில் சாதாரண ரத்தக்கட்டு என்று நினைத்த பெற்றோர், சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அந்த கரும்புள்ளி நாளடைவில் பெரிதாக ஆரம்பித்தது. கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ரூ.40 லட்சம் வரை கடன் வாங்கி செலவு செய்தும் சிறுமியின் முகத்தில் இருந்த கரும்புள்ளி மாறாமல் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால் குழந்தையின் முக அமைப்பே மாறுபட்டது. இதனால் டானியா மட்டுமின்றி அவரது பெற்றோரும் வேதனை அடைந்தனர்.
இதுபற்றி சமூக வலைதளங்கள் மூலம் அறிந்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மர்மநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியை உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்து கலைஞரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். அதன்படி திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பூந்தமல்லி அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிறுமி டானியா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் அவள், 2½ லட்சம் பேரில் ஒருவருக்கு வரக்கூடிய அரிய நோயான முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிறுமியை கவனிப்பதற்கு தனியாக டாக்டர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த 24-ஆம் தேதி சிறுமி டானியாவுக்கு 10 போ் கொண்ட மருத்துவக் குழுவினா் சுமாா் 9 மணி நேர முக சீரமைப்பு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனா்.
இந்நிலையில் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவை சந்தித்து முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
இதனைத்தொடர்ந்து அவர் தனது டுவிட்டரில், "சிறுமி டானியாவை அன்புடன் நலம் விசாரித்து, புன்னகையைப் பரிமாறிக் கொண்டேன். வலுவான நம்முடைய மருத்துவக் கட்டமைப்பால், இது சாத்தியமாகியுள்ளது!
இந்தப் புன்னகையைவிட எது இன்றைய நாளை முழுமையாக்கியிருக்க முடியும்? நம் மருத்துவக் கட்டமைப்பைக் காத்து, புன்னகைகளைப் பரிசாகப் பெறுவோம்!" என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.