பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் முதல்-அமைச்சர் அச்சத்தில் உள்ளார்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அச்சத்தில் உள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2023-10-24 14:10 GMT

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது;

"என்னை பற்றி பல்வேறு விமர்சனம் செய்துள்ளார்கள். அதில் ஒருசிலவற்றை குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த கூட்டத்தின் நோக்கம், அந்த கட்சி சம்பந்தப்பட்டது. அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால், அந்த கூட்டத்தில் என்னைப் பற்றி அதிக நேரம் பேசியுள்ளார். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, பொய்யர் பழனிசாமி என்று குறிப்பிட்டுள்ளார். நான் இதுவரை ஊடகத்திலோ, பத்திரிகையிலோ பொய் செய்தி வெளியிட்டதில்லை. எனது அறிக்கையிலோ அல்லது ஊடகத்தில் பேட்டி அளிக்கும் போதோ, பொய்யான செய்தியை நான் எப்போதும் கொடுத்ததில்லை.

ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு, திரு ஸ்டாலின் அவர்கள் என்னை பற்றி தவறான விமர்சனம் செய்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது. நாங்கள் பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணியில் இருந்து விலகிவிட்ட பிறகு, எங்களை பற்றி அதிகளவில் விமர்சனம் செய்து வருகிறார். ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பது, விலகுவது அந்த கட்சியை பொருத்தது. எங்களை பொருத்தவரை நாங்கள் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம். விலகிவிட்ட காரணத்தினால் தி.மு.க. தலைவர் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார். அவரது பேச்சு மற்றும் அறிக்கையில் இருந்து இதனை புரிந்து கொள்ள முடிகிறது.

100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தையும் முதல் அமைச்சர் கிடப்பில் போட்டுள்ளார். வரிகளை எல்லாம் உயர்த்தியும் அரசிடம் நிதி பற்றாக்குறை தான் உள்ளது. 

அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு முடிக்கும் தருவாயில் இருந்தது. அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன. அந்த கட்டடங்களே தற்போது திறந்து வைக்கப்படுகின்றன." இவ்வாறு அவர் கூறினார்.  

 

Tags:    

மேலும் செய்திகள்