தலைமை பொறியாளர் பணி வழங்கக்கோரி வழக்கு
தலைமை பொறியாளர் பணி வழங்கக்கோரி வழக்கில் அரசு பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த மதுரம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- ஈரோடு மாநகராட்சியில் நகரப் பொறியாளராக உள்ளேன். தற்போது மாநகராட்சிகளில் தலைமைப் பொறியாளர் பணியிடம் புதிதாக ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பணிக்கு சீனியாரிட்டி அடிப்படையிலும், தகுதி அடிப்படையிலும் நான் உரிய தகுதியைப் பெற்று உள்ளேன். அதாவது, வருகிற 31-ந்தேதி ஓய்வு பெறுகிறேன். எனவே என்னை மதுரை மாநகராட்சி அல்லது வேறு ஏதேனும் ஒரு மாநகராட்சியில் தலைமைப் பொறியாளராக நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் தெரிவிக்கும் பணியிடத்தை அரசு தான் நிரப்ப முடியும். காலியிடத்தை நிரப்பும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது. எனவே மனுதாரரின் ஓய்வு காலத்தை கருத்தில் கொண்டு அவரது கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.