சிதம்பரத்தில் பட்டப்பகலில் துணிகரம் பல்மருத்துவக்கல்லூரி ஊழியர் வீட்டில் ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சிதம்பரத்தில் பல் மருத்துவக்கல்லூரி ஊழியர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அண்ணாமலைநகர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் முத்தையா நகர் பாரதி சாலையை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 42). இவர் அதேபகுதியில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மற்றும் பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். அருணாச்சலம் மட்டும் வீட்டில் தனியாக இருந்து பணிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு அருணாச்சலம் பல் மருத்துவக்கல்லூரிக்கு சென்றார். பின்னர், அவர் மதியம் சாப்பிடுவதற்காக வீடு திரும்பினார். அப்போது அவருடைய வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், படுக்கை அறையில் இருந்த பீரோவை பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. இதனால் பதறிய அருணாச்சலம் இதுபற்றி அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
நகை-பணம் கொள்ளை
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டதுடன், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அருணாச்சலம் வேலைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதனிடையே கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்களையும் சேகரித்துச் சென்றனர்.
பரபரப்பு
மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
அண்ணாமலை நகரில் பட்டப்பகலில் பல் மருத்துவக்கல்லூரி ஊழியர் வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.