சத்ரபதி வீரசிவாஜி சிலை உடைப்பு
மார்த்தாண்டம் அருகே சத்ரபதி வீரசிவாஜி சிலை உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே சத்ரபதி வீரசிவாஜி சிலை உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
சத்ரபதி வீரசிவாஜி சிலை
மார்த்தாண்டம் அருகே மேல்புறம் வட்டவிளையில் தோட்டத்துமடம் நவநீதகிருஷ்ணன் கோவில் உள்ளது. அதன் அருகில் உள்ள கோவில் குளத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மராட்டிய மன்னன் சத்ரபதி வீரசிவாஜியின் 9 அடி உயர சிலை ஒன்று நிறுவப்பட்டது.
ராம நவமி, விஜயதசமி, வீர சிவாஜியின் பிறந்த தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் அந்த வீர சிவாஜி சிலைக்கு இந்து அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர்.
சிலை உடைப்பு; பதற்றம்
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம கும்பல் வீர சிவாஜி சிலையின் தலைப்பகுதியை உடைத்து சேதமாக்கி உள்ளனர். சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தை அறிந்ததும் நேற்று காலையில் இந்து அமைப்பினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பும், பதற்றமும் உருவானது.
மேலும் மார்த்தாண்டம் போலீசாரும் விரைந்து வந்தனர். பின்னர் சேதப்படுத்தப்பட்ட வீர சிவாஜி சிலையின் தலைப்பகுதியை துணியால் மறைத்தனர். பின்னர் ஏதும் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
விசாரணை
அதே சமயத்தில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஏதேனும் மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு நடத்தினர்.
இதுதொடர்பாக ஆலய தலைவர் நடராஜன் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.