சாத்தையாறு அணை முழுமையாக தூர்வாரி விரிவுபடுத்தப்படும் - அமைச்சர் மூர்த்தி தகவல்

சாத்தையாறு அணை முழுமையாக தூர்வாரி விரிவுப்படுத்தப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

Update: 2022-10-12 20:43 GMT

அலங்காநல்லூர்

சாத்தையாறு அணை முழுமையாக தூர்வாரி விரிவுப்படுத்தப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

சாத்தியார் அணை

பாலமேடு அருகே உள்ள சாத்தையாறு அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது 27 அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியான வகுத்து மலை, செம்பூத்துமலை, சிறுமலை தொடர்ச்சி, மற்றும் மஞ்சமலை பகுதிகளில் இருந்து கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையால் அணை முழுவதுமாக நிரம்பி ஏற்கனவே அணைநீர் மறுகால் பாய்ந்தது.

இப்பகுதி விவசாயிகளும் அணையை பாசனத்திற்கு திறக்க வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, நேற்று காலையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை தாங்கி அணையை திறந்து வைத்தார்.

மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாசன வசதி பெறும் 11 கிராம கண்மாய்களுக்கு அணையிலிருந்து நிலங்களுக்கு வினாடிக்கு 25 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நீர்வரத்து 15 கன அடி வருகிறது. மேலும் 16 நாட்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் பாசனத்திற்கு தண்ணீர் விடப்படும். சுமார் 1500 ஏக்கர் வரை பாசன வசதி பெறும்.

கலந்து கொண்டவர்கள்

அணை திறப்பின் போது செயற்பொறியாளர் அன்பு செல்வம், சையது ஹபீப், உதவி பொறியாளர்கள் ராஜ்குமார், மாயகிருஷ்ணன், பாசன ஆய்வாளர் தியாகராஜன், தி.மு.க. செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், மாவட்ட அவைத்தலைவர் பாலமேடு பாலசுப்பிரமணியன், பேரூராட்சி தலைவர்கள் சுமதி பாண்டியராஜன், ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், செயல் அலுவலர் தேவி, முன்னாள் தலைவர் ரகுபதி, விவசாய அணி நடராசன், பேரூர் செயலாளர் மனோகரவேல் பாண்டியன், வலையபட்டி ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி இதயச்சந்திரன், விவசாய சங்கத் தலைவர் ரமேஷன் செல்வராஜ், அவைத்தலைவர் தங்கம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், இப்பகுதி பாசன விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அணை விரிவுபடுத்தப்படும்

முன்னதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை எம்.ஜி.ஆர்.பஸ் நிலையத்திலிருந்து, ஊமச்சிகுளம் வழியாக பாலமேடு பகுதி ராமகவுண்டன்பட்டிக்கு புதிய வழித்தடத்தில் டவுன் பஸ் விடப்பட்டது.இதன் தொடக்க விழா பாலமேடு பஸ் நிலையத்தில் நடந்தது. அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், சாத்தையாறு அணை கொள்ளளவை அதிகரிக்கும் வகையில் அணையை முழுவதுமாக தூர்வாரி விரிவுபடுத்தப்படும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் மூலம் மாநில அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்