செய்யாறு போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

செய்யாறு அருகே கோவில் திருவிழாவின்போது ஊராட்சி தலைவியின் கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இன்னும் கைது செய்யப்படாததால் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-09-06 09:30 GMT

செய்யாறு தாலுகா பெரும்பள்ளம் கிராமத்தில் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட தகராறில் அந்த கிராம ஊராட்சி மன்ற தலைவி மகாலட்சுமியின் கணவர் பத்மநாபனை சில இளைஞர்கள் தாக்கினர். அதில் படுகாயம் அடைந்த பத்மநாபன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து பத்மநாபனின் மகன் அளித்த புகாரின் பேரில் செய்யாறு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பத்மநாபனை தாக்கியதாக கூறப்பட்டவர்களில் கருணாகரன், ஆறுமுகம், ரமேஷ், ஏகாம்பரம், பசுபதி ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆனால் இந்த கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதா பொதுமக்கள் தரப்பில்குற்றச்சாட்டு இருந்து வருகிறது. உள்ளூரில் நடமாடிக்கொண்டிருக்கும் அவர்களை ஒரு மாதமாகியும் போலீசார் கைது செய்யவில்லை என்றும் எனவே அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி செய்யாறு நகர போலீஸ் நிலையத்தை பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்து வந்த அ.தி.மு.க மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் அங்கு வந்தார். போராட்டத்தில் ஈடுபட்ட பத்மநாபன் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆதரவாக செய்யாறு நகர போலீஸ் நிலையத்திலிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மோகனிடம் அவர் வழக்கு குறித்து கேட்டறிந்தார்.

குற்றவாளிகள் இன்னும் இரு தினங்களுக்குள் கைது செய்யப்படவில்லை என்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பில் சாலை மறியல் செய்வோம் என அவர் கூறினார்.

தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் மோகன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் செய்யாறு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசனின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

அதன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். முற்றுகை போராட்டத்தால் செய்யாறு போலீஸ் நிலையத்தில் சுமார் 20 நிமிடம் பரபரப்பாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்