செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவில் தேர் திருவிழா

செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-03-27 18:03 GMT

தேர் திருவிழா

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் வடபழனி என்றழைக்கப்படும் தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தண்டாயுதபாணி சுவாமிக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து கோவில் முன்பு உள்ள கொடிமரத்துக்கு மஞ்சள், சந்தனம், விபூதி, களபம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பிறகு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, மேள தாளத்துடன் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

பக்தி கோஷம்

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள், கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா... என்று பக்தி கோஷம் எழுப்பினர். இதில் செட்டிகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து தினந்தோறும் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. மேலும் காலை, மாலை வேளையில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெறுகிறது. வருகிற 2-ந் தேதி இரவு திருக்கல்யாண உற்சவமும், சுவாமி புறப்பாடும் நடக்கிறது.

3-ந் தேதி இரவு குதிரை வாகனம், வெள்ளி மயில் வாகனம் மற்றும் புஷ்ப பல்லாக்கில் சுவாமி புறப்பாட்டு உற்சவம் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 4-ந் தேதி மாலை 4.45 மணியளவில் நடைபெறுகிறது. 5-ந் தேதி மாலை தேர் மீண்டும் நிலைக்கு வருகிறது. 8-ந் தேதியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகி்ன்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்