குன்னம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி சாதனை
குன்னம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி சாதனை புரிந்தது.
பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசு தின விழாவையொட்டி குன்னம் குறுவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் வேப்பூர் கல்வி மாவட்டத்துக்குட்பட்ட செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியின் 14 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகள் அணிகள் கபடி போட்டியிலும், 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள் அணியினர் கபடி போட்டியிலும் முதலிடம் பிடித்தனர். 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான எறிபந்து போட்டியில் 2-வது இடமும், 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியில் 2-வது இடமும், டேபிள் டென்னிஸ் போட்டியில் 2-வது இடமும் பிடித்தனர். தடகள போட்டியில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் இணைந்து 18 தங்கம், 12 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 38 பதக்கங்களை பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர். இதில் மாணவிகள் கீர்த்தனா, கார்த்திகா ஆகிய 2 பேரும் தனி நபர் சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்தனர். குன்னம் குறுவட்ட அளவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பெருமை சேர்ந்த மாணவ-மாணவிகளையும், அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் மணி, அறிவழகன், ஏகாம்பரம் ஆகியோர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பொன்னுத்துரை, உதவி தலைமை ஆசிரியர் கலியமூர்த்தி, தொழிற்கல்வி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.