செஸ் ஒலிம்பியாட் ஜோதி இன்று தஞ்சை வருகை

செஸ் ஒலிம்பியாட் ஜோதி இன்று தஞ்சை வருகை;

Update: 2022-07-25 19:59 GMT

செஸ் ஒலிம்பியாட் ஜோதி இன்று (செவ்வாய்க்கிழமை) தஞ்சைக்கு வருகிறது. உற்சாக வரவேற்பு அளிக்க வீரர்கள், மாணவர்கள் தயாராக உள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. செஸ் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டம் தோறும் செஸ் போட்டிகள் நடத்தப்படுவதுடன், பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

செஸ் ஒலிம்பியாட் ஜோதியை டெல்லியில் கடந்த மாதம் 19-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த செஸ் ஜோதி 75 நகரங்களுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் கோவை, மதுரை, கன்னியாகுமரி, தஞ்சை ஆகிய பகுதிகளுக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

இன்று கொண்டு வரப்படுகிறது

அதன்படி செஸ் ஒலிம்பியாட் ஜோதி நேற்று தமிழகம் வந்தடைந்தது. 75-வது நகரமாக தஞ்சைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி கொண்டு வரப்படுகிறது. இந்த ஜோதிக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பிறகு 100 விளையாட்டு வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் ஜோதியுடன் புதிய பஸ் நிலையத்திற்கு வருகின்றனர். அங்கிருந்து 200 பேர் மோட்டார் சைக்கிள் ஊர்வலத்துடன் ஜோதியை பெரியகோவில் வரை கொண்டு செல்கின்றனர்.

அங்கிருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுடன் ஜோதி எடுத்து செல்லப்படுகிறது. அப்போது மேள, தாளம் முழங்க யானை, குதிரைகளுடன் செஸ் ஒலிம்பியாட் ஜோதி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள திடலுக்கு செல்கிறது. அங்கே 75-வது சுதந்திர தினத்தை குறிப்பிடும் வகையில் 75 அடி நீளத்தில் மேடை அமைக்கப்படுகிறது. அங்கு 150 கலைஞர்கள் பங்கேற்கும் கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், பொய்க்கால்குதிரையாட்டம், புலியாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றனர். அதன்பிறகு இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்