மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி: ரூ.8 கோடியில் மேம்பாட்டு பணி குறித்து பேரூராட்சி கூட்டத்தில் ஆலோசனை
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ரூ.8 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக மாமல்லபுரம் பேரூராட்சி அவசர கூட்டம் நடந்தது.;
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் உலகம் முழுவதிலும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியை முன்னிட்டு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்ய தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ள ரூ.8 கோடி மதிப்பீட்டில் மாமல்லபுரத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட உள்ளன.
இந்த நிதியில் புதிதாக மின் விளக்குகள் பொருத்துதல், நவீன கழிப்பறைகள் மற்றும் குடிநீர் தொட்டியுடன் கூடிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், சோழி பொய்கை குளத்தை தூர்வாரி சீரமைத்தல், கோவளம் சாலையில் நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வரும் வெளிநாட்டு வீரர்கள், ரசிகர்கள் இந்நகரை பார்த்து ரசிக்கும் வகையில் மாமல்லபுரத்தை அழகுபடுத்த பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த பணிகளை செய்ய பேரூராட்சி சார்பில் கடந்த 15-ந்தேதி டெண்டர் விடப்பட்டது.
இதில் ரூ.5 கோடியே 25 லட்சத்துக்கு மட்டும் பணிகள் டெண்டர் எடுக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.2.75 கோடி பணிகளுக்கான டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை. இதையடுத்து டெண்டர் கோராத ரூ.2.75 கோடி தொகைக்கு பேரூராட்சி நிர்வாகமே பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிப்பதற்காக மாமல்லபுரம் பேரூராட்சி மன்ற அவரச கூட்டம் தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் கணேஷ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தலைவர் உள்ளிட்ட அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 5 பேர், தி.மு.க. கவுன்சிலர்கள் 5 பேர், ம.தி.மு.க. பெண் கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 11 பேர் பங்கேற்றனர். இதில் மாமல்லபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் ஜி.ராகவன் உள்ளிட்ட அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேர் பங்கேற்கவில்லை. 14-வது வார்டு ம.தி.மு.க. பெண் கவுன்சிலர் எதற்காக கூட்டம் நடைபெறுகிறது என தெரிவிக்காமல், 1 மணிக்கு நடைபெறும் கூட்டத்திற்கு 12 மணிக்கு குறுகிய நேரத்தில் தகவல் தெரிவிக்கிறீர்கள் என்று கூறி இதனை கண்டித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். கூட்டத்தின் முடிவில் பேரூராட்சி நிர்வாகமே டெண்டர் கோரப்படாத தொகைக்கான அனைத்து பணிகளையும் மேற்கொள்வதற்கு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செயல் அலுவலர் கணேஷ் தெரிவித்தார்.