செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி-ஊர்வலம்

திண்டுக்கல்லில் செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு செஸ் போட்டி மற்றும் போலீசாரின் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-07-23 16:32 GMT

செஸ் போட்டி

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில் மனித செஸ் போட்டி நேற்று நடந்தது. இதில் கல்லூரி வளாகத்தில் செஸ் போர்டு போன்று கருப்பு, வெள்ளை நிறத்தில் கட்டங்கள் வரையப்பட்டன.

அவற்றில் செஸ் போர்டில் இடம்பெறும் ராஜா, ராணி, குதிரை, யானை உள்ளிட்ட பொம்மைகளுக்கு பதிலாக கல்லூரி மாணவிகள் பொம்மைகள் போல் நின்று, செஸ் போர்டு கட்டங்களில் நகர்ந்து செஸ் விளையாடினர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. முன்னதாக இந்த போட்டியை கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், ஜி.டி.என். கல்லூரி இயக்குனர் துரைரெத்தினம், கல்லூரி முதல்வர் பாலகுருசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழிப்புணர்வு ஊர்வலம்

இதேபோல், செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசாரின் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே தொடங்கிய இந்த ஊர்வலம் ஆர்த்தி தியேட்டர் ரோடு, பழனி சாலை, தாலுகா அலுவலக சாலை, பெரியகடை வீதி, ஆர்.எஸ்.ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று திண்டுக்கல் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்