சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சிதம்பரம்,
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று(வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம்(ஆகஸ்டு) 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து சிதம்பரம் நகர மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிதம்பரம் வட்ட அரசு வருவாய் துறையும், அண்ணாமலை பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி நேற்று அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. பேரணியை துணைவேந்தர் ராம. கதிரேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நிறுவனர் ராஜா சர். அண்ணாமலை செட்டியார் சிலையில் இருந்து தொடங்கிய இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று, சிதம்பரம் பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.
இதில் அண்ணாமலை பல்கலைக்கழக அனைத்து துறையை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் கே.சீதாராமன், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி எம்.பிரகாஷ், தொலைதூரக் கல்வி இயக்குனர் ஆர். சிங்காரவேல், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவி, தாசில்தார் ஹரிதாஸ், வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், அண்ணாமலைநகர் பேரூராட்சி மன்றத்தலைவர் பழனி, பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி ஜி.ரெத்தினசம்பத், துணைவேந்தரின் நேர்முகச் செயலாளர் பாக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்திய மொழியியல் துறை முதல்வர் கே.முத்துராமன் மற்றும் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் ஆகியோர் செய்திருந்தனர்.