பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சதுரங்க போட்டி
பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சதுரங்க போட்டி நடந்தது.;
பெரம்பலூர் மாவட்ட சதுரங்கம் கழகத்தின் சார்பில், மாவட்ட அளவிலான சதுரங்க (செஸ்) போட்டி பெரம்பலூர் மரகதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. போட்டியை பள்ளியின் தாளாளர் நிருபா தொடங்கி வைத்தார். இதில் 11, 13, 15, 17 ஆகிய வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக சதுரங்க போட்டி நடத்தப்பட்டது. 4 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.பின்னர் மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் கலந்து கொண்டு 4 பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு கேடயங்கள், பதக்கங்களை வழங்கி பாராட்டினார். முதல் இடம் பிடித்த மாணவ-மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் சதுரங்க போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட சதுரங்கம் கழகத்தின் தலைவர் சரவணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.