பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டி

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டி நடந்தது.

Update: 2022-07-25 19:25 GMT

பள்ளி, வட்டார அளவில் போட்டிகள்

சர்வதேச அளவிலான 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலும், 9 முதல் 10-ம் வகுப்பு வரையிலும், 11 முதல் 12-ம் வகுப்பு வரையிலும் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி அளவில் தனித்தனியாக செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு வட்டார அளவிலான போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டன.

மாவட்ட அளவிலான போட்டிகள்

இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 4 வட்டாரங்களில் இருந்தும், அரியலூர் மாவட்டத்தில் 6 வட்டாரங்களில் இருந்தும் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலும், 9 முதல் 10-ம் வகுப்பு வரையிலும், 11 முதல் 12-ம் வகுப்பு வரையிலும் முதல் 3 இடங்களை பெற்ற தலா 18 மாணவ-மாணவிகள் என பெரம்பலூர் மாவட்டத்தில் 72 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 108 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று மாவட்ட அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், அரியலூர் மாவட்டத்திற்கு அஸ்தினாபுரம் மாதிரி பள்ளியிலும் போட்டிகள் நடந்தன. அரியலூர் மாவட்ட அளவிலான போட்டியை கலெக்டர் ரமணசரஸ்வதி, க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தொடங்கி வைத்தார். பெரம்பலூரில் மாவட்ட கல்வி அலுவலர்கள் சண்முகம் (பெரம்பலூர்), ஜெகநாதன் (அரியலூர்) ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

மாநில அளவில்...

இதில் 3 பிரிவுகளிலும் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மாவட்டங்களில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. ேமலும் மாவட்டங்களில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் பயிற்சி முகாம், போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் அவர்கள் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வீரர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பை பெறுவார்கள்.

9 முதல் 10-ம் வகுப்பு வரையிலும், 11 முதல் 12-ம் வகுப்பு வரையிலும் முதல் 2 இடங்களை பிடித்தவர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பார்வையிடும் வாய்ப்பை பெறுகின்றனர். இதில் முதல் இடம் பிடித்த மாணவ-மாணவிகள் நாளை மறுநாள் தொடங்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி அணிவகுப்பில் கலந்து கொண்டு, போட்டியை பார்வையிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2-ம் இடம் பிடித்தவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வருகிற 29-ந்தேதியும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வருகிற 6-ந்தேதியும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்வையிட செல்ல உள்ளனர் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்