மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரேநாளில் 9 அடி உயர்வு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையொட்டி சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்துள்ளது;
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையொட்டி சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்துள்ளது.
பரவலாக மழை
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 55 அடியாக இருந்த நிலையில் நேற்று மேலும் 4 அடி உயர்ந்து 59.65 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,666 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனம், குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 355 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சேர்வலாறு அணை
இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 70.73 அடியாக இருந்தது. இந்த நிலையில் நேற்று 79.26 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் சேர்வலாறு அணை நீர்மட்டம் சுமார் 9 அடி உயர்ந்துள்ளது.
118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 83.30 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 487 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 75 கன அடி தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இதுதவிர திருக்குறுங்குடி அருகே உள்ள கொடுமுடியாறு அணை பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து 178 கன அடியாக அதிகரித்து உள்ளது. இதனால் அணை நீர்மட்டம் 6 அடி உயர்ந்து 35 அடியாக உள்ளது.
தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டத்தில் உள்ள 85 அடி உயரம் கொண்ட கடனா நதி நீர்மட்டம் நேற்று முன்தினம் 30 அடியாக இருந்தது. இந்த நிலையில் மேலும் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 35 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 134 கன அடியாக அதிகரித்து உள்ளது.
ராமநதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 37 அடியில் இருந்து 43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 79 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 1 அரை அடி உயர்ந்து 48 அடியாக உள்ளது. அணைக்கு 18 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நெல்லையில் நேற்று காலை 10.30 மணி அளவில் சிறிது நேரம் மழை பெய்தது. அதை தொடர்ந்து மேக மூட்டமாகவும், அவ்வப்போது வெயிலும் காணப்பட்டது. இதே போல் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் ஊர் பகுதிகளிலும் அவ்வப்போது பரவலாக மழை பெய்தது.
மழை அளவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பாபநாசம் -19, சேர்வலாறு -18, மணிமுத்தாறு -2, கொடுமுடியாறு -37, அம்பை -4, சேரன்மாதேவி -1, நாங்குநேரி -4, களக்காடு -1, மூலைக்கரைப்பட்டி -2. கடனா -6, ராமநதி -10, கருப்பாநதி -4, குண்டாறு -5, அடவிநயினார் -14, ஆய்க்குடி -14, செங்கோட்டை -2, தென்காசி -12, சங்கரன்கோவில் 3.