சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்5-ந் தேதி நடக்கிறது

5-ந் தேதி நடக்கிறது

Update: 2023-03-28 21:45 GMT

சென்னிமலை முருகன் கோவிலில் வருகிற 5-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது.

சென்னிமலை முருகன் கோவிலில்

சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பங்குனி உத்திர தேரோட்டம் வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு 8 மணிக்கு கிராம சாந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. 3-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதையொட்டி அன்று பகல் 11 மணிக்கு முருகன் சன்னதிக்கு முன்புறம் உள்ள கொடிக்கம்பத்தில் சேவல் கொடி ஏற்றப்படுகிறது. 4-ந் தேதி காலை 10 மணிக்கு பூசாரி வேளாளத் தம்பிரான் மடம் மண்டப கட்டளை நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தேரோட்டம்

பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 5-ந் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்து கிழக்கு ராஜவீதி, தெற்கு ராஜவீதி மற்றும் மேற்கு ராஜ வீதி வழியாக சென்று வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்துகிறார்கள். பின்னர் அன்று மாலை 5 மணிக்கு வடக்கு ராஜ வீதி சந்திப்பில் இருந்து மீண்டும் தேர் வடம் பிடித்து இழுத்து நிலை சேர்க்கப்படுகிறது. விழாவை முன்னிட்டு அடிவாரத்தில் அன்று காலை 7 மணி முதல் அக்னி நட்சத்திர அன்னதான விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்று இரவு 8 மணிக்கு பக்தி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மகா தரிசனம்

மறுநாள் 6-ந் தேதி காலை 9 மணிக்கு பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 7-ந் தேதி காலை 8 மணிக்கு மகா தரிசனம் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு மஞ்சள் நீர் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் எம்.அன்னக்கொடி, பெருந்துறை கோவில் ஆய்வாளர் ஆர்.ரவிக்குமார், சென்னிமலை கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்