ரவுடிகள் இல்லாத மாநகரமாக சென்னை மாறும் - போலீஸ் கமிஷனர்

கடும் நடவடிக்கைகள் மூலம் சென்னை ரவுடிகள் இல்லாத மாநகரமாக மாறும் என்று போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கூறினார்.

Update: 2023-07-08 22:54 GMT

 

பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

சென்னை புதிய போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது உத்தரவின் பேரில் சென்னையில் பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணா நகர், கொளத்தூர், கோயம்பேடு, மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, அடையார், தியாகராயநகர், பரங்கிமலை ஆகிய 12 போலீஸ் மாவட்டங்களில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் நடைபெற்றது. கீழ்ப்பாக்கம் துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் பொதுமக்கள் சிலரிடம் குறைகளை கனிவுடன் கேட்டறிந்து, அவர்களது மனுக்களை வாங்கினார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரவுடிகளுக்கு எதிராக நடவடிக்கை

பொதுமக்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். எதிர்காலத்திலும் மாதம் ஒரு முறை இது போன்ற முகாம்களை நடத்த வேண்டும் என்று துணை கமிஷனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பதை அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அல்லது சப்-இன்ஸ்பெக்டர் எழுதி தரவேண்டும்.இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த புகார் விசாரணையில் இருக்கிறது போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். இந்த நடைமுறை ஏற்கனவே அமலில் இருக்கிறது. 'சைபர் கிரைம்' குற்ற வழக்குகளை துரிதமாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் ரவுடிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க போகிறோம். எனவே ரடிவுகள் இல்லாத மாநகரமாக சென்னை மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உத்தரவு

சென்னையில் நேற்று நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். குறிப்பாக இளம்பெண்கள் அதிகம் பேர் வந்திருந்தனர். கல்யாணம் செய்துவிட்டு கணவர் ஓடிவிட்டதாக பல பெண்கள் புகார் அளித்தனர். அதே போன்று நிலத்தகராறு, சொத்து பிரச்சினை, சைபர் மோசடி, போதை ஆசாமிகள் தொல்லை போன்ற புகார்களும் அதிகம் வந்திருந்தன.

இந்த புகார் மனுக்களை அலசி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்