சென்னை பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சென்னை பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் துணைவேந்தர் அறையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் குடிநீர், கழிவறை உள்பட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவ-மாணவிகள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது மாணவர்கள் தங்களுக்கான அடிப்படை வசதிகளை பல ஆண்டுகளாக செய்து தர வலியுறுத்தி போராடி வருவதாகவும், ஆனால் பல்கலைக்கழக தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் கூறி கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். இதையடுத்து போராட்டம் நடத்திய மாணவ-மாணவிகள் சார்பாக 5 பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர்.
பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி, பதிவாளர் ஏழுமலை மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் ஆகியோருடன் மாணவ-மாணவிகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
பரபரப்பு
இதனைத் தொடர்ந்து மாணவ-மாணவிகள் பல்கலைக்கழக துணைவேந்தர் அறைக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.இருப்பினும் அவர்கள் போலீசாரின் தடுப்பையும் மீறி துணைவேந்தர் அறையை முற்றுகையிட்டும், அங்கு தரையில் அமர்ந்தும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தற்காலிக வாபஸ்
இதையடுத்து மீண்டும் 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டனர். அப்போது அவர்களின் கோரிக்கையை பல்கலைக்கழகம் நிறைவேற்றி தரும் என உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் கூறும்போது, 'பல்கலைக்கழக நிர்வாகம் கோரிக்கையை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதனால் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளோம்' என்றனர்.