சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலை விரிவாக்கம்: அம்பத்தூர், ஆவடி சிறு-குறு வணிகர்கள் பாதிப்பு

சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை விரிவாக்க பணியால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் எ.வ.வேலுவிடம் விக்கிரமராஜா நேரில் மனு அளித்துள்ளார்.

Update: 2022-06-21 04:05 GMT

சென்னை, அம்பத்தூர்-ஆவடி பகுதியில் 2 தலைமுறைகளாக, நெடுங்காலமாக சாலையின் இருபுறமும் மலர், காய்கறி, பெட்டிக்கடை, மளிகைக்கடை போன்ற அடித்தட்டு சிறு-குறு வணிகர்கள் தங்கள் வணிகத்தின் மூலம் வாழ்வாதாரத்தை ஈட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தநிலையில், தற்போது சென்னையில் இருந்து திருவள்ளூர் வரை நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிக்காக, அரசு ஆணையின் பெயரில் அம்பத்தூர்-ஆவடி பகுதிகளில் சாலை விரிவாக்கம் நடைபெற உள்ளதால் சிறு-குறு வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அப்போது வணிகர்களின் பாதிப்புகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார்.

இந்த சந்திப்பின் போது, மாநிலத் துணைத் தலைவர் சி.மகாலிங்கம் மற்றும் ஒய்.எட்வர்ட், முகமது மீரான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் எ.வ.வேலு சாலை விரிவாக்கம் சம்பந்தமாக ஆய்வு செய்து வணிகர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தீர்வு காண்பதாக உறுதி அளித்தார்.

மேற்கண்ட தகவல் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்