சென்னை புறநகர் ரெயிலில் பெண்கள் பெட்டியில் கிடந்த பெண் குழந்தையை மீட்ட ரெயில்வே போலீஸ்...!
சென்னையில் மின்சார ரெயிலின் பெண்கள் பெட்டியில் கிடந்த குழந்தையை ரெயில்வே போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரெயிலில் நாள்தோறும் ஏராளமானவர்கள் பயணம் செய்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு, தனியார் ஊழியர்கள் என மின்சார ரெயிலை அதிகமாக பயணிகள் பயன்படுத்துவதால் சென்னையின் போக்குவரத்து நேரிசலை தவிர்ப்பதில் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது.
இத்தகை மின்சார ரெயில் சேவையில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக பயணிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு சான்றாக பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ரெயிலில் தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் மின்சார ரெயிலில் பெண்கள் பெட்டியில் கேட்பாரற்று குழந்தை ஒன்று கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அந்த ரெயிலில் என்று பார்த்த ரெயில்வே போலீசார் பெண்கள் பெட்டில் தனியாக இருந்த பெண் குழந்தையை மீட்டனர்.
பின்னர், குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த ரெயில்வே போலீசார், சிகிச்சைக்கு பின்பு செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.
மேலும், மின்சார ரெயிலில் குழந்தையை போட்டு சென்றவர்கள் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.