சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை பணி விரைவில் தொடங்கும்

சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலைக்கான டெண்டர் நாளை மறுநாள் இறுதி செய்யப்பட உள்ளதாகவும், அந்த சாலை பணி விரைவில் தொடங்கும் என்றும் துறைமுக சபை தலைவர் சுனில்பாலிவால் கூறினார்.

Update: 2023-04-03 23:10 GMT

சென்னை,

கடந்த 2022-23-ம் நிதியாண்டில் சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. அதாவது சென்னை துறைமுகம் கடந்த 13 ஆண்டுகளாக இல்லாத வகையில் ரூ.150.36 கோடி லாபம் ஈட்டி உள்ளது. 2021-22-ம் ஆண்டை ஒப்பிடும்போது இது 33 சதவீதம் அதிகம் ஆகும்.

சென்னை துறைமுகத்தில் 48.95 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட இது 0.8 சதவீதம் அதிகம் ஆகும்.

கார் ஏற்றுமதி அதிகரிப்பு

2021-22-ம் ஆண்டில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 482 கார்கள் சென்னை துறைமுகத்தின் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டன. 2022-23-ம் நிதியாண்டில் இது, 2 லட்சத்து 31 ஆயிரத்து 412 என உயர்ந்து 36 சதவீதம் அதிகரித்துள்ளது. 37 பயணிகள் கப்பல் மூலம் 85 ஆயிரம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சென்னை மப்பேடு பகுதியில் ரூ.184.27 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,423.5 கோடி செலவில் ஏற்றுமதி வசதி, சேமிப்பு, குளிர்பதன கிட்டங்கி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் 'மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ்' எனப்படும் பல்வகை தளவாட பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக 64 ஏக்கரில் இதற்கான பணிகள் நடைபெற உள்ளது. இந்த முதற்கட்ட பணி 2025-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும்.

பறக்கும் சாலைக்கு டெண்டர்

ரூ.6 ஆயிரத்து 76 கோடியில் அமைய உள்ள சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலைக்கான டெண்டர் வருகிற 6-ந் தேதி (நாளை மறுநாள்) இறுதி செய்யப்படும். டெண்டருக்கு எந்தவித கால நீட்டிப்பும் வழங்கப்படாது. டெண்டர் இறுதி செய்யப்பட்டதும் பணிகள் தொடங்கும். இந்த பறக்கும் சாலை சென்னை துறைமுகம்-கோயம்பேடு இடையே மட்டும் ஈரடுக்கு சாலையாக அமைய உள்ளது.

இந்த சாலைக்காக கோயம்பேடு-மதுரவாயல் இடையே அமைக்கப்பட்டுள்ள தூண்கள் இடிக்கப்படாமல் மீண்டும் பயன்படுத்தப்படும். அதேவேளையில் கோயம்பேடு-சென்னை துறைமுகம் இடையே ஈரடுக்கு சாலையாக அமைய உள்ளதால் இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சில தூண்கள் கூவம் ஆற்றின் நீரோட்டத்துக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் இடிக்கப்படும்.

ரூ.1,000 கோடி வருவாய்

சென்னை துறைமுகத்தில் இருந்து இயக்கப்படும் பயணிகள் கப்பலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதன்காரணமாக கூடுதலாக பயணிகள் கப்பலை இயக்குவது குறித்து தனியார் கப்பல் நிறுவனங்களுடன் பேசி வருகிறோம்.

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் முதன்முறையாக ரூ.1,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி உள்ளது. இதன்மூலம் காமராஜர் துறைமுகத்துக்கு நிகர லாபமாக ரூ.669.83 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த 2021-22-ம் நிதியாண்டை ஒப்பிடும்போது 24.39 சதவீதம் அதிகம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது சென்னை துறைமுக சபை துணைத்தலைவர் பாலாஜி அருண்குமார் உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்