சென்னையில் கூகுள் வரைபடம் மூலம் வாகன நெரிசலை சரிசெய்யும் நவீன திட்டம்

சென்னையில், கூகுள் வரைபடம் மூலம் வாகன நெரிசலை உடனுக்குடன் சரிசெய்யும் நவீன திட்டத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்தார்.

Update: 2023-06-20 09:06 GMT

கூகுள் வரைபடம் மூலம்...

சென்னையில் சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல் போக்குவரத்து போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. அதை உடனுக்குடன் சரி செய்வதில் பெரும் பிரச்சினை உள்ளது. உடனுக்குடன் போக்குவரத்து நெரிசலை சரிசெய்வதற்காக விஞ்ஞான ரீதியாக புதிய திட்டங்களை போக்குவரத்து போலீசார் அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அதில், கூகுள் வரைபடம் மூலம் வாகன நெரிசலை சீர் செய்யும் திட்டம் ஒன்று சோதனை அடிப்படையில் சென்னையில் செயல்படுத்தி பார்க்கப்பட்டது. அதில் வெற்றி கிடைத்ததால் கூகுள் வரைபடம் மூலம் வாகன நெரிசலை சீர் செய்யும் திட்டத்தை போக்குவரத்து போலீசார் நேற்று முழுமையாக செயல்படுத்த தொடங்கி விட்டனர்.இதன் தொடக்க விழா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், போக்குவரத்து போலீசாருக்கு நவீன உபகரணங்களையும் அவர் வழங்கினார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த...

கூகுள் வரைபடம் மூலம் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கூகுள் வரைபடம் மூலம் எந்தெந்த இடங்களில் நெரிசல் ஏற்படுகிறது என்ற விவரங்களை சேகரித்து, அதை செயல்படுத்த புதிய செயலி ஒன்றை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் உருவாக்கி உள்ளோம். அந்த செயலி மூலம் போக்குவரத்து நெரிசல் உடனடியாக சரி செய்யப்படும். நெரிசலின் அளவு எந்த அளவு உள்ளது? என்பதை விளக்க குறிப்பிட்ட நிறங்கள் அறிவிக்கப்படும். இது பற்றிய தகவல் போக்குவரத்து போலீசாருக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மட்டுமே உடனுக்குடன் தெரியவரும். பொதுமக்களுக்கு தற்போது இந்த தகவல் தெரியவராது. வருங்காலங்களில் பொதுமக்களுக்கும் இது தெரியும் வகையில் புதிய ஏற்பாடு செய்யப்படும்.

கூகுள் நிறுவனத்துக்கு இதற்காக ஆண்டுக்கு ரூ.96 லட்சம் கொடுக்கப்படும். இதேபோல் சென்னையில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் முறையும் நவீன முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 'ஸ்பீடு ரேடார் கன்' என்ற நவீன கருவி பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவியை முக்கிய சாலை சந்திப்புகளில் மட்டும் பொருத்தி அதிவேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.

கண்காணிப்பு ரோந்து வாகனங்கள்

தற்போது 2 கண்காணிப்பு ரோந்து வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. அதில் 'ஸ்பீடு ரேடார் கன்' கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த 2 வாகனங்களும் கிழக்கு கடற்கரைச்சாலை மற்றும் மெரினா கடற்கரைச் சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீடு ரேடார் கன் கருவி மூலம் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிந்து உடனடியாக அபராதத் தொகை செலான் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுபோன்ற கண்காணிப்பு ரோந்து வாகனம் சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து போலீசாருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது வாகனங்களின் வேகம் பகலில் 40 கி.மீ., இரவு 50 கி.மீ. என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிந்து அபராத தொகை செலான் அனுப்பி வைக்கப்படுகிறது. அரசின் போக்குவரத்து துறை உத்தரவு அடிப்படையில் மேற்கண்ட வேகம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிக்னல்களை நவீனப்படுத்தும் பணி

30 சாலை சந்திப்புகளில் ஸ்பீடு ரேடார் கன் கருவியை பொருத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில், பாரிமுனை சந்திப்பு, ஸ்பென்சர் சந்திப்பு, புல்லா அவென்யூ, ஈஞ்சம்பாக்கம் உள்பட 10 இடங்களில் முதல் கட்டமாக பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 சாலை சந்திப்புகளில் விரைவில் பொருத்தப்படும். சிக்னல்களை நவீனப்படுத்த அரசு ரூ.5 கோடி ஒதுக்கி உள்ளது. அதன் மூலம் 68 சிக்னல்களை நவீனப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி.சரத்கர், இணை கமிஷனர் மயில்வாகனன், துணை கமிஷனர்கள் சரவணன், சக்திவேல், சாய்சிங் மீனா, ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்