சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் மரணம்
சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் மரணம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.
சென்னை,
தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராகவும், பெருநகர சென்னை மாநகராட்சியின் 165-வது வார்டு கவுன்சிலராகவும் இருந்து வந்த நாஞ்சில் ஈஸ்வரபிரசாத் (வயது 56) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று அதிகாலை மரணம் அடைந்தார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு இறுதிச்சடங்குகள் நடக்கின்றன. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'தம் பகுதி மக்களின் தேவைகளுக்காக முன்னின்று அவர்களின் நன்மதிப்பையும், அன்பையும் பெற்றவர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர், காங்கிரஸ் பேரியக்கத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி. சு.திருநாவுக்கரசர் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.