சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் புகை வந்ததால் பரபரப்பு
சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சைக்கிளில் மோதிய ரெயில்
சென்னையில் இருந்து தினமும் இரவு 11.16 மணிக்கு திருச்சி வழியாக மங்களூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரெயில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2.15 மணியளவில் விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை இடையே கில்லனூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த சமயத்தில் ரெயில் வேகமாக வருவதை பார்த்த மர்மநபர் தான் ஓட்டி வந்த சைக்கிளை தண்டவாளத்தில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து ஓடிவிட்டார். அடுத்த சில நொடிகளில் அதிவேகமாக வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த சைக்கிள் மீது மோதியது. இதில் ரெயில் என்ஜின் முன்பகுதியில் அந்த சைக்கிள் சிக்கிக்கொண்டதோடு, அதில் இருந்த உதிரிபாகங்கள் ஆங்காங்கே விழுந்தன.
நடுவழியில் நிறுத்தம்
இதை கவனித்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனே ரெயிலை நடுவழியில் நிறுத்தியதுடன், இதுபற்றி விருத்தாசலம் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரெயில் என்ஜினில் சிக்கிய சைக்கிளை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்களால் சைக்கிளை எடுக்க முடியவில்லை. இதையடுத்து இரவு 2.45 மணியளவில் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு விருத்தாசலம் அடுத்த பூவனூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு என்ஜினில் சிக்கிய சைக்கிளை ஊழியர்கள் அகற்றினர். அதைத் தொடர்ந்து அந்த ரெயில் அங்கிருந்து, மங்களூர் நோக்கி புறப்பட்டு சென்றது. மேலும் இதுகுறித்து விருத்தாசலம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது சதிச்செயலா? அல்லது தற்செயலாக நடந்த விபத்தா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சைக்கிளை தண்டவாளத்தில் போட்டுவிட்டு சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.
ரெயில் பெட்டிகளில் புகை
இதற்கிடையே அதே மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த வாளாடி அருகே வந்தபோது, அந்த ரெயிலின் பின்பகுதியில் கூடுதலாக இணைக்கப்பட்டு இருந்த மருத்துவ உபகரணங்கள் இருந்த பெட்டிகளில் இருந்து புகை வந்துள்ளது. இதை கவனித்த அங்குள்ள ரெயில்வே கேட் கீப்பர் இது குறித்து ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து அந்த ரெயில் ஸ்ரீரங்கத்துக்கு வந்ததும், ரெயிலை நிறுத்தி எதனால் புகை வந்தது என்று ஆராய்ந்தனர். ஆனால் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் ஸ்ரீரங்கத்தில் இருந்து 1.34 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு காலை 5.42 மணிக்கு அந்த ரெயில் வந்தது. மீண்டும் மருத்துவ உபகரணங்கள் இருந்த பெட்டியை ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.
ஆனால் அதில் எந்த கோளாறும் இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை காரணமாக, மருத்துவ உபகரணங்கள் இருந்த 3 பெட்டிகளும் கழற்றி யார்டில் விடப்பட்டன. இதைத்தொடர்ந்து 1½ மணி நேரம் தாமதமாக காலை 6.23 மணிக்கு அந்த ரெயில் புறப்பட்டு சென்றது. இதன்காரணமாக அந்த ரெயிலில் இருந்த பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.