கஞ்சிக்கோடு - வாளையாறு வழித்தடத்தில் 30 கி.மீ வேகத்திலேயே ரெயிலை இயக்க வேண்டும் - தெற்கு ரெயில்வேக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

கஞ்சிக்கோடு - வாளையாறு வழித்தடத்தில், இரவு நேரங்களில் ரெயிலை 30 கி.மீ வேகத்திலேயே இயக்க வேண்டும் என்று தெற்கு ரெயில்வேக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update: 2022-11-24 13:30 GMT

சென்னை,

யானைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் இன்று நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக கடந்தமுறை கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி, சோலார் விளக்குகள் அமைப்பதை தவிர்த்து மற்ற உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டு விட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

18 கோடி ரூபாய் மதிப்பில் சோலார் விளக்குத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ரெயில்வே தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால் கஞ்சிக்கோடு - வாளையாறு வழித்தடத்தில் இரவு நேர ரெயில் சேவையை நிறுத்த வேண்டி வரும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த வழித்தடம் முக்கியமானது என்பதால் இது போன்ற உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டாம் என்று ரெயில்வே தரப்பில் வலியுறுத்தப்பட்டது. கடினமான மலைப் பகுதியில் இந்த ரெயிலை இயக்கக்கூடிய தொழில்நுட்பம் உள்ளபோதும் கூட இந்த உத்தரவை உங்களால் செயல்படுத்த முடியாதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழித்தடத்தில் ஏற்படக்கூடிய விபத்துகளால் வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு யானைகள் வரை உயிரிழப்பதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த வழித்தடத்தில் இரவில் ரெயில்களை 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்