போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: பாமக எம்.எல்.ஏ குடும்பத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

மருமகள் அளித்த வரதட்சணை கொடுமை புகார் தொடர்பான காவல்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி, பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் குடும்பத்தினருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-09-01 09:28 GMT

சென்னை,

சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பாமக-வை சேர்ந்த சதாசிவத்தின் மகன் சங்கருக்கும், சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த மனோலியாவுக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் மனோலியா அளித்த புகாரில், திருமணத்தின்போது வரதட்சணையாக 200 சவரன் நகை, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார், 20 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொடுத்துள்ள நிலையில், மேலும் வரதட்சணை கேட்டு கணவர் சங்கர், மாமனார் சதாசிவம், மாமியார் பேபி, நாத்தனார் ஆகியோர் கொடுமைப்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரில், எம்.எல்.ஏ. சதாசிவம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை தடுப்பு சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி எம்.எல்.ஏ.சதாசிவம், மகன் சங்கர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சதாசிவம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஜாதா, கடந்த பிப்ரவரி மாதம் முதல் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், தங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளுடன் புகாரளித்துள்ளதாக கூறினார்.

காவலில் எடுத்து விசாரிப்பதற்கான தேவை இருக்கிறதா என காவல்துறையிடம் நீதிபதி கேள்வி எழுப்பியபோது, விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வரும் 4ம் தேதி காலை 11 மணிக்கு சூரமங்கலம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சதாசிவம் குடும்பத்தினருக்கு உத்தரவிட்டு, முன் ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணையை 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்