சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கொலை: திருவையாறு நீதிமன்றத்தில் சரணடைந்த 4 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கொலை வழக்கில் திருவையாறு நீதிமன்றத்தில் சரணடைந்த 4 பேரை தா.பழூர் போலீசார் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்கின்றனர்.

Update: 2022-09-13 18:02 GMT

வக்கீல் கொலை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 37). சென்னை ஐகோர்ட்டு வக்கீலான இவரை அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தில் கடந்த 7-ந் தேதி 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமையிலான 3 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி திருவையாறு குற்றவியல் நீதிமன்றத்தில் 6 பேர் சரணடைந்தனர். அதே நாளில் தனிப்படை போலீசார் 2020-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட செல்வமணி என்பவரது தம்பி இளையராஜா உள்ளிட்ட சிலரை வலைவீசி தேடி வந்தனர்.

போலீஸ் காவல்

இதில் தேடப்பட்டு வந்த இளையராஜாவின் மனைவி ரெஜினா, ரெஜினாவின் உறவினர்களான கும்பகோணத்தை சேர்ந்த செல்வகுமார் (41), திருநாரையூரை சேர்ந்த செல்வம், மோகன்தாஸ் மகன் நவீன்குமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து அரியலூர் மாவட்ட நீதித்துறை நடுவர் அறிவு முன்பு ஆஜர்படுத்தினர். மேலும் இளையராஜா உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர். இந்தநிலையில் திருவையாறு நீதிமன்றத்தில் சரணடைந்தவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தா.பழூர் போலீசார் சார்பில் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி திருநாரையூர் கிருஷ்ணமூர்த்தி மகன் குருமூர்த்தி (21), கும்பகோணம் முகமதுரபீக் மகன் தமீம் அன்சாரி (35), நாச்சியார் கோவில் பிரபு மகன் தினேஷ்குமார் (27), திருநறையூர் முருகானந்தம் மகன் விஜய் (20) ஆகியோரை 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளார். மேலும் நாச்சியார் கோவில் பாஸ்கர் மகன் தினேஷ்குமார் (23), திருநாரையூர் செல்வம் மகன் கரண் (33) ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் போலீஸ்காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கப்படவில்லை.

இன்று விசாரணை

இதையடுத்து போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்கப்பட்ட 4 பேரையும் இன்றும், நாளையும் தா.பழூர் போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உள்ளனர். விசாரணை முடிவில் கொலைக்கான உண்மையான காரணம் என்ன?, கொலை செய்ய திட்டமிடப்பட்டது எப்படி, கொலையாளிகளுக்கு உதவியவர்கள் யார் யார்? உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தெரியவரும். போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்