ஐ.ஐ.டி. பேராசிரியர் என ஏமாற்றி திருமணம்: சொந்த வீடு கேட்டு அரசு டாக்டரை சித்ரவதை செய்த கணவர் கைது

சென்னை ஐ.ஐ.டி.யில் பேராசிரியராக பணிபுரிவதாக ஏமாற்றி திருமணம் செய்ததுடன், சொந்த வீடு கேட்டு அரசு டாக்டரை சித்ரவதை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-16 21:04 GMT

மாநகராட்சி டாக்டர்

சென்னை தியாகராயநகர் கங்கைகரைபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சண்முக மயூரி (வயது 29). டாக்டரான இவர் சென்னை மாநகராட்சி அசோக்நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை அசோக்நகர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் பரபரப்பு புகார் மனு அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

எனது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சேத்திடல் கிராமம் ஆகும். எனது பெற்றோர் மும்பையில் தங்கி தொழில் செய்து வருகின்றனர். எனக்கும் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே உள்ள சக்கந்தி என்ற கிராமத்தை சேர்ந்த பிரபாகரனுக்கும் (34) கடந்த 7.2.2020 அன்று திருமணம் நடைபெற்றது.

பிரபாகரன் சென்னை ஐ.ஐ.டி. பல்கலைகழகத்தில் பி.எச்.டி. பட்டம் பெற்று, அங்கேயே பேராசிரியராக பணிபுரிந்து வருவதாக கூறினார். எனவே அவருக்கு வரதட்சணையாக 101 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம், 5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.15 லட்சம் மதிப்பிலான கார் உள்ளிட்ட பொருட்களை எனது பெற்றோர் வழங்கினார்கள். அவர்கள் குடும்பத்தினர் சென்னையில் சொந்த வீடு வாங்கி தர வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு எனது பெற்றோர் சம்மதம் தெரிவித்திருந்தனர். ஆனால் திருமணத்துக்கு அதிகம் செலவானதால் அது முடியாமல் போனது.

இந்த சூழ்நிலையில் நானும், பிரபாகரனும் சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள பெரியார் வீதி திருநகரில் உள்ள வீட்டில் கடந்த 2020-ம் ஆண்டு வாடகைக்கு குடியேறினோம். தினமும் பிரபாகரன் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். வீடு வேண்டும் என்று என்னை அடித்து சித்ரவதை செய்வார். இதையெல்லாம் அனுசரித்து வாழ்ந்தேன்.

அரிவாள் வெட்டு

கடந்த பிப்ரவரி மாதம் எனது நண்பரின் திருமண விழாவுக்கு செல்வதற்கு நகைகளை தேடியபோது, பிரபாகரன் அந்த நகைகளை தனது சகோதரருக்கு அடகு வைத்து கொடுத்திருப்பதாக சொன்னார். இதனால் அவர் மீது எனக்கு சந்தேகம் வந்தது. நான் எனது தம்பியுடன் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி அன்று சென்னை ஐ.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் விசாரித்த போது, அவர் அங்கு வேலை செய்யவில்லை என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

இதுகுறித்து அன்றைய தினம் அவரிடம் கேட்ட போது, சொந்த வீடுக்காக தான் உன்னை திருமணம் செய்தேன் என்று கூறி என்னை கடுமையாக தாக்கி, அரிவாளால் வெட்டினார். நான் கதறி அழுதவுடன் பக்கத்து அறையில் இருந்த எனது தம்பி ஓடிவந்தார். உடனே பிரபாகரன் அரிவாளை போட்டுவிட்டு ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து மும்பையில் வசிக்கும் எனது பெற்றோரிடம் கூறினேன். அவர்கள் பொறுத்துக்கொள் என்று சொல்லி என்னை சமாதானம் செய்ததால், அப்போது போலீசில் நான் புகார் அளிக்கவில்லை.

இந்த நிலையில் நானும், எனது தம்பியும் பிரபாகரனின் 'லேப்-டாப்' பை திறந்து, அவரது இணையதள முகவரியை பார்த்தோம். அதில் இருந்த தகவல் மூலம் அவருக்கு 2019-ம் ஆண்டு வேறொரு பெண்ணுடன் திருமணமாகி குழந்தை இருப்பதை கண்டுபிடித்தோம். இதுபற்றி கேட்ட போது, எனது தம்பிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

என்னையும், என் பெற்றோரையும் ஏமாற்றி மோசடி செய்த பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

கைது

இந்த புகாரின்பேரில் பிரபாகரன், அவரது தந்தை விஸ்வநாதன் (70), மனைவி மஞ்சனை (65), சகோதரர் கண்ணதாசன் (38), அவருடைய மனைவி வனிதா (32), மற்றொரு சகோதரர் நெப்போலியன் (31) ஆகிய 6 பேர் மீது அசோக்நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் பிரபாகரன் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

விசாரணையின் அடிப்படையில் அடுத்தடுத்து கைது நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்