24 மண்டலங்களாக மாறும் சென்னை மாநகராட்சி - விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்
சென்னை மாநகராட்சி 24 மண்டலங்களாக மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளன. இது தொடர்பாக அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
சென்னை,
2011-ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி 10 மண்டலங்கள் இருந்தன. சென்னை மாநகராட்சி விரிவாக்கத்திற்கு பிறகு மண்டலங்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கப்பட்டு 200 வார்டுகளாக மறுசீரமைப்பு செய்யப்பட்டன. ஆனால், மாநகராட்சியில் 23 சட்டசபைத் தொகுதிகள் உள்ள நிலையில், சென்னை மாவட்டத்தில் 16 சட்டசபை தொகுதிகள் மட்டுமே உள்ளன. மற்ற ஆறு சட்டசபை தொகுதிகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளன.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில், சட்டசபைத் தொகுதிக்கு ஏற்ப, மண்டலங்களை அதிகரிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். இதன்படி சென்னை மாநகராட்சி மொத்தம் 24 மண்டலங்களாக மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சென்னையில் சட்டசபை தொகுதிகளுக்கு ஏற்ப, மண்டலங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன. சென்னை மாநகராட்சியில் 22 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் பெரிய தொகுதிகளும் சில உள்ளன. அவற்றை நிர்வாக வசதிக்காக ஒரே சராசரியாக வரையறை செய்யும்போது, 24 ஆக மண்டலங்கள் பிரிக்க வேண்டியுள்ளது.
இதுகுறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசித்தப்பின், ஓரிரு வாரங்களின் அரசின் ஒப்புதல் பெற்ற பின், மண்டலங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். சட்டசபை தொகுதிகள் வாரியாக வார்டுகள் பிரிக்கப்படும்போது, எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதி வாயிலாக, மண்டலத்தில் வளர்ச்சி பணிகள், அக்குறிப்பிட்ட வார்டுக்கு முழுமையாக கிடைக்கும்" என்று அவர்கள் கூறினர்.