சென்னை: ராட்சத கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த 5 பேர் படுகாயம் - மருத்துவமனையில் அனுமதி
சென்னையில் ராட்சத கழிவுநீர் கால்வாய் பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.;
பூந்தமல்லி,
பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி கடந்த பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் சாலை சந்திப்பு பகுதியில் பூந்தமல்லி நோக்கி செல்லும் சர்வீஸ் சாலையில் மழைநீர் செல்வதற்காக கால்வாய் அமைக்க ராட்சத பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது.
ஆனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்லாத வகையில் நெடுஞ்சாலை துறையினர் முறையான தடுப்புகள் அமைக்காததால் வழக்கமாக போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சர்வீஸ் சாலையில் ராட்சத பள்ளம் இருப்பது தெரியாமல் அந்த வழியாக வந்தனர்.
அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் நிலை தடுமாறி சுமார் 15 அடி ஆழ பள்ளத்தில் அடுத்தடுத்து விழுந்தனர். இதில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டனர். அங்கு வந்த போக்குவரத்து போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் 5 பேருக்கும் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிகிறது.
சாலை விரிவாக்க பணியின் போது வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக மிளிரும் ஒலிப்பான்கள், மின்விளக்குகள், தடுப்புகள் ஏதும் இல்லாமல் பணி நடைபெறுவதே விபத்துக்கு காரணம் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.