சென்னை: சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் 300 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்...!
சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் 300 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.;
சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் மீன்களின் தரம் குறித்து தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு புகார்கள் எழுந்தன. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் உத்தரவின்பேரில் என்.ராஜா தலைமையிலான அதிகாரிகள் குழு, மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் மாப்பிள்ளை துரை தலைமையிலான அதிகாரிகள் இன்று சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் அழுகிய கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சரியான விதிமுறைகளை பயன்படுத்தி பதப்படுத்தப்படாத மீன்களும் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தவகையில் இன்று 300 கிலோ அழுகிய, கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் மீது பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு, மாநகராட்சி குப்பை கொட்டும் கிடங்குக்கு எடுத்து செல்லப்பட்டு அவை அழிக்கப்பட்டன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உறைவிக்கப்பட்ட மீன்கள் -18 டிகிரி செல்சியஸ் அளவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மார்க்கெட்டில் அவ்வாறு இல்லை. மேலும் அழுகிய மீன்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இது தவறான போக்கு. இதுகுறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த இருக்கிறோம் என்றனர்.
ஆய்வுகள் தொடரும்
மேலும் சிந்தாதிரிப்பேட்டை போல நகரில் உள்ள இதர மீன் மார்க்கெட்களிலும் இது போல தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் என்றும், விதிமுறை மீறல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மீன் மார்க்கெட்களில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளக்கோரி பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மீன்பிடி தடைக்காலம் காரணமாக ஆழ்கடலுக்கு படகுகள் செல்லாத நிலையில் மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதும், அண்டை மாநிலங்களில் இருந்து அதிக இறக்குமதி காரணமாக மீன்கள் விலை லேசாக உயர்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.