செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் விரைவில் திறக்கப்படும் - போலீஸ் ஐ.ஜி. தகவல்
செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் விரைவில் திறக்கப்படும் என்று போலீஸ் ஐ.ஜி. கண்ணன் தெரிவித்தார்.
மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்ட போலீஸ் நிலைய வரவேற்பாளர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. டாக்டர். கண்ணன் பங்கேற்று மடிக்கணினிகளை வழங்கினார். அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பிரதீப் உடனிருந்தார்.
இதனையடுத்து நிருபர்களிடம் ஐ.ஜி.கண்ணன் கூறியதாவது:-
செங்கல்பட்டு போலீஸ் மாவட்டத்தில் 3 உட்கோட்டங்களும், 20 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்களும், 3 மகளிர் போலீஸ் நிலையங்களும் உள்ளன. போலீஸ் நிலையங்களில் பொதுமக்களின் அனைத்து வசதிக்கேற்ப அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு. எளிதாக பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறவும் அவற்றை சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் ஜி.ஆர்.இ.எ.டி. என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
வரவேற்பாளர்கள்
இந்த செயலியின் மூலம் முதலாவதாக மனு கொடுப்பவரின் விவரமும் மனுவின் தன்மை பற்றியும் இந்த செயலியில் பதிவேற்றம் செய்து அதற்கென தனியாக ஒரு மனு எண் ஒதுக்கப்படும். இரண்டாவதாக, அந்த மனுவை விசாரிக்கும் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு மனுவின் மீது எடுக்கபட்ட நடவடிக்கையின் விவரத்தை பதிவேற்றம் செய்யப்பட்டு பொதுமக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட விவரம் தெரிவிக்கப்படும்.
இதற்கென, செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தனித்தனியாக மொத்தம் 38 வரவேற்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் மனுக்களின் விவரத்தினையும் அதற்கான தீர்வினையும் எளிதாகவும் விரைவாகவும் சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் பெற்று கொள்ள வழிவகை செய்ய இயலும்.
விபத்து மரணங்கள்
மேலும் வடக்கு மண்டலத்தில் விபத்து மரணங்கள் பாதியாக குறைந்துள்ளன. என்றும் போலீசாரின் பணிச்சுமையை குறைக்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க வாரம் ஒருமுறை விடுமுறையளிக்கப்பட்டு வருகின்றன. கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளோம், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் விரைவில் திறக்கப்படும். சிங்கப்பெருமாள் கோயிலில் புதிய போலீஸ் நிலையம் குறித்த தகவலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் துரை பாண்டியன், பாரத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர், சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இதனையடுத்து செங்கல்பட்டு. வெண்பாக்கம் கிராமத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தையும் ஐ.ஜி.கண்ணன் பார்வையிட்டார்.