மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.;
கோவை மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பக்தர்களின் 7-வது படை வீடாக போற்றப்படுகிறது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி பிறமாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டு யானைகளின் நடமாட்டத்தின் காரணமாக காலை, மாலை நேரங்களில் மலைக்கோவிலுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மலை கோவிலுக்கு செல்லும் படிக்கட்டு பாதையில் உள்ள தான்தோன்றி விநாயகர் கோவில் பகுதியில் சிறுத்தை உலா வந்ததுள்ளது. இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிறுத்தை நடமாட்டம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.