ஆன்லைனில் மோசடி.. இளைஞர்களுக்கு ஆபாச படம்: மோசடி பெண் குறித்து பரபரப்பு தகவல்கள்

ஆபாச படம் அனுப்பி இளைஞர்களை பெண் மிரட்டியுள்ளார்.;

Update: 2024-05-03 02:02 GMT

கோவை,

கோவையை அடுத்த பன்னிமடையை சேர்ந்தவர் மதுமிதா(வயது 32). இவர் தன்னுடன் படித்தவர்கள் மற்றும் தனக்கு அறிமுகமானவர்களை செல்போனில் தொடர்பு கொண்டும், நேரில் சந்தித்தும் பேசி என்.பி. என்ற பெயரில் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் தொடங்கி இருப்பதாகவும், பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிப்பதாகவும் கூறினார்.

மேலும் தனது நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் தருவதாகவும், முதலீடு செய்த ரூ.1 லட்சத்தையும் ஒரு ஆண்டில் திரும்ப தந்து விடுவதாகவும் ஆசை வார்த்தை கூறினார். அதோடு புதிய முதலீட்டாளர்களை அறிமுகம் செய்து வைத்தால், 5 சதவீதம் வரை ஊக்கத்தொகை தருவதாகவும் தெரிவித்தார்.

இதை நம்பி அவரது நிறுவனத்தில் ஏராளமானோர் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தனர். இவ்வாறாக அவர் பலரிடம் இருந்து ரூ.2 கோடி வரை முதலீடு பெற்றதாக கூறப்படுகிறது. முதல் 2 மாதங்கள் மட்டும் தன்னிடம் முதலீடு செய்தவர்களுக்கு மாதந்தோறும் தருவதாக கூறிய தொகையை கொடுத்து வந்தார். ஆனால் அதன்பிறகு முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை.

இதனால் முதலீடு செய்தவர்கள் அவரை தொடர்பு கொண்டபோது சரியாக பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. ஒரு சிலர் அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று தங்கள் பணத்தை கேட்டுள்ளனர். அப்போது தன்னை மிரட்டுவதாக பணம் கேட்டு வந்தவர்கள் மீதே போலீசில் புகார் அளித்துள்ளார்.

அடுத்த சில நாட்களில் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. வீட்டிலும் அவர் இல்லை. இதனால் அவர் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. இதையடுத்து முதலீட்டாளர்கள் கோவை தடாகம் போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையில் மதுமிதா துபாயில் இருப்பது தெரியவந்தது. அங்கிருந்தவாறே ஆன்லைன் மூலமாக சிலரிடம் அதிக லாபம் தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு பெற்று உள்ளார்.

அதோடு அவர், துபாயில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்து, அங்கு வரும் இளைஞர்களிடம் நட்பை ஏற்படுத்தி கொண்டு, அவர்களுக்கு ஆபாச படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். அதில் ஒரு இளைஞர் போலீசில் புகார் அளிக்க போவதாக தெரிவித்ததும், அங்கிருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சிக்கு வந்தார். இதில் பாதிக்கப்பட்ட வாலிபர்கள், கேரளாவில் உள்ள நண்பர்களுக்கு தெரிவித்தனர்.

அவர்கள் ஏற்கனவே மதுமிதாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் சென்று கொச்சி விமான நிலையத்தில் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் கோவை மாநகர போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த மினிஜான் பிரதீப் என்பவர் அளித்த புகாரின் பேரில் மதுமிதா மீது மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் கோவை மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்தவர்களிடம் பண மோசடி செய்து இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்