பாலியல் புகாரில் சிக்கிய சதுர்வேதி சாமியார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
பாலியல் புகாரில் சிக்கிய சதுர்வேதி சாமியார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். வருகிற 31-ந்தேதி அவர் ஆஜராக சென்னை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை தியாகராயநகரைச் சேர்ந்தவர் வெங்கட சரவணன் என்ற பிரசன்ன வெங்கடாச்சாரியார் சதுர்வேதி (வயது 46).
'சதுர்வேதி சாமியார்' என்ற பெயரில் மிகவும் பிரபலமான அவர், ஏராளமான பெண் பக்தர்களை கொண்டிருந்தார்.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் பக்தர்களின் பிரச்சினையை தீர்ப்பதாக கூறி சதுர்வேதி சாமியார் சிறப்பு பூஜைகளை செய்து வந்தார்.
பாலியல் புகார்
கடந்த 2004-ம் ஆண்டு தனது பிரச்சினைக்காக தொழில் அதிபர் ஒருவர் சதுர்வேதி சாமியாரை பார்க்க சென்றபோது அவரது மனைவி, மகளை சதுர்வேதி சாமியார் மயக்கி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதற்கிடையே சதுர்வேதி சாமியார் மீது கூட்டு சதி, மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் 2004-ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் சதுர்வேதி சாமியார் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இதன் பின்னர் அவர் தலைமறைவானார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
தேடப்படும் குற்றவாளி
இதைத்தொடர்ந்து போலீசார் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று சென்னை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, சதுர்வேதி சாமியாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. அதேவேளையில் வருகிற 31-ந்தேதிக்குள் சதுர்வேதி சாமியார் கோர்ட்டில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறும்போது, 'சதுர்வேதி சாமியார் மீது போடப்பட்டு உள்ள 5 வழக்குகளிலும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே பாலியல் வழக்கில் அவர் தேடப்படும் குற்றவாளியாக 2020-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். சதுர்வேதி சாமியார் மீதான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளன. இந்த வழக்குகளில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில்தான் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார்' என்றனர்.