கோவில் சொத்துகளை மீட்க அறநிலையத்துறை நடவடிக்கை
கோவில் சொத்துகளை மீட்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.;
மதுரையை சேர்ந்த வக்கீல் சரவணக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மணிநகரம் பகுதியில் செல்வவிநாயகர் கோவில் உள்ளது. நான் சிறுவயதில் இருந்தே, இந்த கோவிலின் தீவிர பக்தன். இந்த கோவிலில் நாள்தோறும் பூஜை நடத்துவதற்காகவும், புட்டுத்தோப்பு திருவிழாவுக்காகவும் சிலர் சொத்துகளை தானமாக வழங்கினர். தற்போது இந்த கோவில் சொத்துகள் தனிநபர்களுக்கு கிரையம் செய்யப்பட்டு உள்ளது. எனவே அந்த சொத்துகளை மீட்கவும், கோவில் நிர்வாகத்தை அறநிலையத்துறையினர் மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில், சம்பந்தப்பட்ட கோவில் சொத்துகளை மீட்பது குறித்து மனுதாரர் தரப்பில் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் அனைத்து தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பி சட்டத்துக்கு உட்பட்டு விசாரித்து 8 வாரத்தில் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று அறநிலையத்துறை இணை கமிஷனருக்கு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.