பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் தேரோட்டம்

பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் தேரோட்டம்

Update: 2023-05-04 20:22 GMT

பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

நீலகண்ட பிள்ளையார் கோவில்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற நீலகண்ட பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி பேராவூரணி மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் நீலகண்ட பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

தேரோட்டம்

விழா நாட்களில் தினமும் காமதேனு வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், மயில் வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று அதிகாலை 4 மணி முதல் பால் காவடி, பன்னீர் காவடி, அக்னி காவடி, வேல் காவடி, பறவைக்காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை பக்தர்கள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 5.30 மணிக்கு நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகன் தேரில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.

அன்னதானம்

விழாவில் அசோக்குமார் எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், தொழில் அதிபர்கள் கந்தப்பன், ராமதாஸ், டாக்டர் ஜே.சி. குமரப்பா கல்வி குழும தலைவர் ஸ்ரீதர், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தரராஜன் தலைமையில் நடமாடும் மருத்துவக்குழுவினர் சுகாதார பணியில் ஈடுபட்டிருந்தனர். பேராவூரணியில் உள்ள அனைத்து விழா மண்டபங்களிலும் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசலில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது

திருக்கல்யாணம், தெப்ப உற்சவம்

இன்று(வெள்ளிக்கிழமை) சித்ரா பவுர்ணமி தீர்த்த திருவிழாவும், நாளை ்(சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு தெப்ப உற்சவமும் நடக்கிறது. வருகிற 7-ந்தேதி விடையாற்றி உற்சவமும், மண்டலாபிஷேகமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் தலைவர் கணேசன் சங்கரன், அறங்காவலர் குப்பமுத்து சங்கரன், கோவில் நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் ஸ்தானிகர் சங்கரன் வகையறாக்கள், முடப்புளிக்காடு கிராமத்தார்கள் , கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்