கூத்தைப்பார், பாலகிருஷ்ணன்பட்டி பகுதிகளில் உள்ள கோவில்களில் தேரோட்டம்
கூத்தைப்பார், பாலகிருஷ்ணன்பட்டி பகுதிகளில் உள்ள கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது.
கூத்தைப்பார், பாலகிருஷ்ணன்பட்டி பகுதிகளில் உள்ள கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டம்
திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் கிராமத்தில் கண்ணுடைய அய்யனார் கோவில் உள்ளது. மேலும் இங்கு பொற்கொடியாள், பூர்ணத்தாள், சாத்தபிள்ளை அய்யனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. இக்கோவில் சித்திரை மாத திருவிழா கடந்த 29-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
உப்பிலியபுரம்
உப்பிலியபுரத்தை அடுத்த பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி வடக்கு விஸ்வாம்பாள்சமுத்திரத்தில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை தேர்திருவிழா கடந்த 2-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
கோப்பு மாரியம்மன் கோவில் திருவிழா
திருச்சியை அடுத்த கோப்பு கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர் திருவிழா நேற்று முன்தினம் இரவு படுகள பூஜையுடன் தொடங்கியது. நேற்று அதிகாலையில் கம்பம் ஆற்றுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்து உய்யகொண்டான் வாய்க்காலில் விடப்பட்டது. இரவில் அம்மன் காளை வாகனத்தில் வீதி உலா வந்தார். இன்று (புதன்கிழமை) பூதகன வாகனத்திலும், நாளை (வியாழக்கிழமை) அன்னவாகனத்திலும் வலம் வருகின்றனர்.
12-ந் தேதி தேருக்கு முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி யும், 13-ந் தேதி இரவு வெள்ளை யானை வாகனத்திலும், 14-ந் தேதி இரவு காமதேனு வாகனத்திலும், 15-ந் தேதி இரவு சிகப்பு குதிரை வாகனத்திலும் அம்மன் வீதி உலா வருகிறார். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 16-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 17-ந் தேதி அம்மன் முத்து பல்லக்கில் வீதி உலா வருகிறார். 18-ந் தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டுக்கான விழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பட்டையதார்கள், பொது மக்கள் செய்து வருகின்றனர்.