வையைக்கரை ஆண்டவர் கோவில் தேரோட்டம்

வையைக்கரை ஆண்டவர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-30 17:55 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வயலப்பாடி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த வையைக்கரை ஆண்டவர் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆவணி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 22-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதன் பின்னர் தினமும் ஒவ்வொரு உபயதாரர்கள் பங்களிப்புடன் வையைக்கரை ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. தினமும் இரவு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம் நாடு நலம் பெற வேண்டியும், மழை வேண்டியும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

அதைத்தொடர்ந்து நேற்று வையைக்கரை ஆண்டவருக்கு 18 வகையான மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வெடி, மேள தாளங்கள், முழங்க திருத்தேருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் வாணவேடிக்கையுடன் கிராம முக்கியஸ்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து பக்தர்கள் தேரோடும் நான்கு வீதிகள் வழியாக தேரை இழுத்து வந்தனர். ஒவ்வொரு தெருவிலும் பக்தர்கள் கூடிநின்று அர்ச்சனை செய்தனர். பின்னர் மாலை தேர் நிலைக்கு வந்து நிறுத்தப்பட்டது. தேரோட்டத்தில் வயலூர், வேப்பூர், கல்லை, ஓலைப்பாடி, கீரனூர், துங்கபுரம், கோவிந்தராஜபட்டினம் உள்பட சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்