வாழப்பாடி அக்ரஹாரம் சென்றாய பெருமாள் கோவிலில் தேர் வெள்ளோட்டம்

வாழப்பாடி அக்ரஹாரம் சென்றாய பெருமாள் கோவிலில் தேர் வெள்ளோட்டம் நடந்தது.

Update: 2023-03-11 20:47 GMT

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரத்தில் 204 ஆண்டுகள் பழமையான பூதேவி, சீதேவி சமேத சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ரூ.25 லட்சத்தில் மரத்திலான புதிய தேர் வடிவமைக்கப்பட்டது. இந்த தேர் வெள்ளோட்டம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள் மலர் மாலை அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். வாழப்பாடி பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

பக்தர்களும், இளைஞர்களும் மேளவாத்திய இசைக்கு ஏற்ப கிராமிய சேர்வை நடனமாடி மகிழ்ந்தனர். தேரோடும் வீதிகளில் வீடுகள் தோறும் தாம்பூலம், அவல், கடலை, வெல்லத்தோடு வீதி உலா வந்த சுவாமிக்கு படையல் வைத்தனர். தேர் வடம் பிடித்து இழுத்த பக்தர்களுக்கு, குளிர்பானம், இனிப்பு, உணவு பொருட்களை வழங்கி வரவேற்பு அளித்தனர். குடியிருப்பு பகுதிகளில் பொரி உருண்டை, வாழைப்பழம் ஆகியவற்றை தேரின் மீது வீசி பக்தர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் செய்திகள்