பங்குனி திருவிழாவையொட்டி மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தேரோட்டம்

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.;

Update: 2023-04-03 23:17 GMT

சென்னை,

'மயிலையே கயிலை, கயிலையே மயிலை' என்று போற்றப்படும் பெருமைக்குரிய சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பங்குனி திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

அதன்படி கடந்த மாதம் 28-ந்தேதி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் வெள்ளி சூரிய வட்டம், வெள்ளி சந்திர வட்டம், கிளி-அன்ன வாகனங்களில் வீதி உலா, அதிகார நந்தி காட்சி, திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் விழா என ஒவ்வொரு நாளும் திருவிழா களைகட்டியது.

தேரோட்டம்

பங்குனி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ேதரோட்டம் நேற்று நடைபெற்றது. விநாயகர், முருகன், கபாலீசுவரர், கற்பகாம்பாள், சண்டிகேசுவரருக்கு என தேர்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தேர் திருவிழாவையொட்டி நேற்று காலை முதலே மாட வீதிகளில் பக்தர்கள் அதிகளவில் குவிய தொடங்கினர். நேரம் செல்ல மக்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.

காலை சரியாக 7.25 மணிக்கு திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கற்பகாம்பாள் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். மாட வீதிகள் முழுவதும் தேர் சென்றது. அப்போது திரண்டிருந்த பக்தர்கள் 'மயிலை நாதா, கபாலீசுவரா...' என்றும், 'ஹர ஹர சிவசங்கரா...' எனவும் பக்தி கோஷம் எழுப்பினர். 'எள் போட்டால் எள் எடுக்கமுடியாது' என்ற அளவுக்கு குழுமியிருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே, ஆடி அசைந்து தேர் சென்றது. கபாலீசுவரர் வீற்றிருந்த தேர் 96 அடி உயரமும், 300 டன் எடையும் கொண்டதாகும்.

அன்னதானம் வழங்கிய பக்தர்கள்

தேர் வரும் திசையெங்கும் கயிலாய வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் வழிபாடு நடத்தினர். பொதுமக்களும் கற்பூரம் ஏந்தி இறைவனை தரிசித்து மனமுருக வேண்டினர். மயிலாப்பூர் மாட வீதிகள் முழுவதும் பக்தி மனம் கமழும் இடமாகவே மாறி இருந்தது. தேர் வந்த சமயம் பலர் பொங்கல், வடை, பிஸ்கெட் உள்ளிட்டவைகளை பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கினர். சிலர் மோர் பாக்கெட்டுகள் வழங்கினர்.

தேரோட்டத்தில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு, பாம்பன் சுவாமிகள் பக்தர்கள் சார்பில் 'சண்முக கவசம்', 'குமாரஸ்தவம்' புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

காலை 7.25 மணிக்கு வடம் பிடித்து இழுக்கப்பட்ட தேர் பகல் 12.58 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அப்போது பக்தர்கள் பரவசத்துடன் 'சங்கரா... சங்கரா...' என முழங்கினர். தேர்த்திருவிழா நிகழ்வு முழுவதும் யூ-டியூப்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன. இதனால் தேர்த்திருவிழாவை நேரில் பார்க்க முடியாதவர்களும் யூ-டியூப்கள் மூலமாக தேரோட்டத்தை பார்த்து இறைவனை தரிசித்து கொண்டனர்.

போலீசார் தீவிர கண்காணிப்பு

தேரோட்ட திருவிழாவையொட்டி 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். 68 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், 14 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும் கண்கொத்தி பாம்பு போல கண்காணித்தனர். இதுதவிர சாதாரண உடையிலும் கண்காணித்தனர்.

மாட வீதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம்களும், ஆம்புலன்சுகளும் தயார் நிலையிலேயே இருந்தது. தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையிலேயே இருந்தன.

அறுபத்து மூவர் விழா

தேர் திருவிழாவை முன்னிட்டு தேவடி தெரு, நடுத்தெரு, சுந்தரேஸ்வரர் தெரு, சித்திரை குளம் தெருக்கள், ஆடம்ஸ் தெரு, ஆர்.கே.மடம் சாலை, கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு போன்ற பகுதிகளில் இருந்து மாட வீதிகள் நோக்கி போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல வாகனங்கள் நிறுத்தவும் தனி இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தேர் திருவிழா காரணமாக மயிலாப்பூர் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

பங்குனி திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் பகல் 2.45 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன் எழுந்தருள, அறுபத்து மூன்று நாயன்மார்களோடு திருக்காட்சி நிகழ்ச்சி நடக்கிறது. 6-ந்தேதி இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம் மற்றும் கொடி இறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்