முத்துமாரியம்மன் கோவில்களில் தேரோட்டம்
கொத்தமங்கலம், காரையூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவிழா
கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் வரை திருவிழா நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைெபற்றது. தொடர்ந்து அம்மன் வீதி உலாவும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. பொங்கல் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காய், கனி, மலர்கள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ஒரு தேரில் வாழவந்த பிள்ளையார், மற்றொரு தேரில் பேச்சியம்மன், பெரிய தேரில் முத்துமாரியம்மன் வீற்றிருக்க 3 தேர்களையும் சிறுவர்கள், பெண்கள், பக்தர்கள் என தனித்தனியாக வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவில் நிலையை வந்தடைந்தது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரியும், நாளை (புதன்கிழமை) தெப்ப உற்சவமும் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசாரும் செய்து வருகின்றனர்.
காரையூர்
காரையூர் முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 21-ந் தேதி காப்புக்கட்டுதல், பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நேற்று முன்தினம் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் முத்துமாரியம்மன் எழுந்தருளினார். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரை பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.