பிரசன்ன வெங்கட்ரமண கோவில் தேரோட்டம்
காருவள்ளி சின்ன திருப்பதி பிரசன்ன வெங்கட்ரமண கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஓமலூர்
பிரசன்ன வெங்கட்ரமன கோவில்
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காருவள்ளி சின்னதிருப்பதியில் வரலாற்று சிறப்புமிக்க பிரசன்ன வெங்கட்ரமன கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையிலும் காலை 5 மணி முதல் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சாமி திருக்கல்யாணம், கருடசேவை நடந்தது.
தேரோட்டம்
தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 10 மணிக்கு சுதர்சன ஹோமம், பூர்ணாகுதி, சுவாமி ரதம் ஏறுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலை 4 மணி அளவில் தேரோட்டம் நடந்தது.
விழாவில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மணி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பல்பாக்கி கிருஷ்ணன், தமிழரசு, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சித்தேஸ்வரன், சுப்பிரமணியம், ராஜேந்திரன், அசோகன், கோவிந்தராஜ், மணிமுத்து, காடையாம்பட்டி ஒன்றிய குழு தலைவர் மாரியம்மாள், தி.மு.க. ஒன்றிய செயலாளர், அறிவழகன், ரவிச்சந்திரன், நகர தி.மு.க. செயலாளர் பிரபாகரன், தி.மு.க. மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் அருள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தொடர்ந்து இரவு 7 மணிக்கு பல்சுவை இன்னிசை நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு சுவாமி வீதி உலா புறப்பாடு, சத்தாபரணம் நடந்தது. ஏற்பாட்டை கோவில் அறங்காவல் குழு தலைவர் நைனா குமார் மற்றும் அறங்காவலர்கள், இந்து அறநிலைத்துறையினர் உள்ளிட்டவர்கள் செய்து இருந்தனர்.