சென்னை விமான நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் வசூல்
சென்னை விமான நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஆறு அடுக்குகளை கொண்ட நவீன 'மல்டி லெவல் கார் பார்க்கிங்' கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.
விமான நிலைய வளாகத்துக்குள் நுழையும் இடத்தில் டோல்கேட் அமைக்கப்பட்டு கார்கள் 'ஸ்கேன்' செய்யப்பட்டு டோக்கன் கொடுக்கும் முறை அமலில் உள்ளது. அந்த டோக்கனில் வாகனத்தின் எண், உள்ளே நுழையும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். வெளியில் செல்லும்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்டில் டோக்கனை பார்த்து, எவ்வளவு நேரம் நின்றதோ அதற்கு தகுந்தாற்போல் கட்டணங்களை வசூல் செய்து அனுப்பப்படும்.
அதே நேரத்தில் இருசக்கர வாகனங்கள் உள்ளே நுழையும்போது டோக்கன் வாங்க வேண்டியது இல்லை. பார்க்கிங்கில் நிறுத்தி கொள்ளலாம். வெளியே செல்லும்போது அப்பகுதியில் நிற்கும் பார்க்கிங் ஊழியர், இருசக்கர வாகனங்களிடம் கட்டணங்களை வசூலித்து கொள்வார்கள்.
காவல்துறை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பத்திரிகையாளர், அரசு துறையினர், விமான நிலைய ஊழியர்கள் போன்றவர்களுக்கு வாகன கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் பார்க்கிங் பகுதி பராமரிப்பு நிர்வாகத்தை தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதனால் நேற்று முதல் விமான நிலையத்துக்குள் நுழையும் இருசக்கர வாகனங்கள் அனைத்துக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் டோல்கேட்டில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு என்று தனியாக அமைக்கப்பட்டுள்ள வழியில்தான் செல்ல வேண்டும். அங்கு பணியில் இருக்கும் டோல்கேட் ஊழியர், இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டை 'ஸ்கேன்' செய்து டோக்கன் கொடுக்கிறார்.
விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வழியில் டோல்கேட் ஊழியர்கள் இருசக்கர வாகனங்கள் எவ்வளவு நேரம் உள்ளே நிறுத்தப்பட்டதோ அதற்கு தகுந்தாற்போல் பார்க்கிங் கட்டணம் வசூலித்து விட்டு அனுப்புகின்றனர்.
மேலும் இதில் காவல்துறை, மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர், விமான நிலைய ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், அரசு துறையை சார்ந்தவர்கள் யாருக்கும் விதிவிலக்கு இல்லை. அனைவரும் கட்டணம் செலுத்த வேண்டும்.
உள்ளே நுழையும் போது கொடுக்கும் டோக்கனை தவற விட்டவர்களுக்கு வெளியேறும் போது ரூ.150 அபராதமாகவும் வசூலிக்கப்படுகிறது.