ரூ.1.90 கோடி மோசடி வழக்கில் தொடர்புடையவர் லால்குடி கோர்ட்டில் சரண்
ரூ.1.90 கோடி மோசடி வழக்கில் தொடர்புடையவர் லால்குடி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
லால்குடியை அடுத்த தச்சங்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.1.90 கோடி நிதி இழப்பீடு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அப்போதைய கூட்டுறவு சங்க மாவட்ட பதிவாளர் திவ்யா, கூட்டுறவு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து கூட்டுறவு சங்கத்தின் அப்போதைய தலைவர் ெதய்வராஜ், செயலாளர் ராஜேஷ் கண்ணன் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேர் உயிரிழந்து விட்டனர். மீதமுள்ளவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இதில் தலைமறைவாக இருந்த கஜேந்திரன், பாலகிருஷ்ணன், நடராஜன், ராஜேஸ்வரி, ரெட்டி மாங்குடி அமுதா ஆகிய 5 பேரையும் கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடிய நிலையில் புதூர் உத்தமனூரை சேர்ந்த தெய்வராஜ்(41) என்பவர் லால்குடி கோர்ட்டில் நீதிமன்ற நடுவர் ராஜ்குமார் முன்னிலையில், முன்னாள் அரசு வக்கீல் ஆட்சியப்பன் மூலம் சரண் அடைந்தார். பிறகு தெய்வராஜை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதின் பேரில் லால்குடி சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் ராஜேஷ் கண்ணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.